Published : 19 Nov 2022 02:41 PM
Last Updated : 19 Nov 2022 02:41 PM

கனமழை எச்சரிக்கை | கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் 

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்| கோப்புப் படம்

சென்னை: கனமழை எச்சரிக்கை காரணமாக அவரச கால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள காரணத்தால், எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள காரணத்தால், கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி பகுதிக்கு 17 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

செம்பரம்பாக்கம் ஏரியில் 20.13 அடி தண்ணீர் இருக்கிறது. 256 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 912 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியில் 18.09 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. 189 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 677 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x