

நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் கச்சத் தீவின் உரிமை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதி மன்றத்தில் மீனவர் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.
கச்சத் தீவில் இந்திய மீனவர்களுக்கு உள்ள மீன்பிடி உரிமையை உறுதிப்படுத்தக் கோரியும், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கக் கோரியும் மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, கச்சத் தீவு விவகாரம் என்பது முடிந்து போன ஒன்று என்றும், கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இல்லை என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கருத்துகளை மறுத்து பீட்டர் ராயன் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
இந்திய இலங்கை மீனவர்களுக்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லையை தீர்மானிக்கும் உடன் படிக்கை 1974ம் ஆண்டுஏற்பட்டது. இந்த உடன்படிக்கையில் கச்சத் தீவுப் பகுதியில் நமது மீனவர் களுக்கு பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த கச்சத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையானது, 1976-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையேயான கடிதப் பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உடன்படிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படாத தோடு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்கவில்லை. இரு நாட்டு பிரதமர்கள் இடையே 1974-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உரிமையை, 1976-ம் ஆண்டில் இரு நாட்டு வெளியுறவு செயலாளர்கள் இடையே நடைபெற்ற கடிதப் பரி மாற்ற ஒப்பந்தத்தின் மூலம் எவ்வாறு ரத்து செய்ய முடியும்? என பீட்டர் ராயன் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.