

அதிமுக அரசை நல்வழிப்படுத்த வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள 3 தொகுதி தேர்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்யுமாறு வாக்காளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வரும் 19-ம் தேதி தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுக சார்பில் தஞ்சாவூரில் அஞ்சுகம் பூபதி, அரவக்குறிச்சியில் கே.சி.பழனிச்சாமி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அம்மாநில முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களின் வெற்றிக்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொய்வின்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.இந்த 4 தொகுதிகளிலும் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் ஆர்வத்தோடும், அக்கறையோடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
4 தொகுதி தேர்தல் பிரச்சாரத்துக்கு திமுக தலைவர் என்ற முறையில் நான் நேரடியாக செல்லாவிட்டாலும், உடல் நலக்குறைவைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தேர்தல் நிலவரங்களை விசாரித்தும் அறிந்து வருகிறேன்.
நானும், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனும் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாவிட்டாலும் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர தொகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
4 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றும் கட்சியினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை அவ்வப்போது எனக்கு தெரிவித்து வருகிறார். களப்பணியில் உள்ள செயல் வீரர்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் அளித்து வருகிறார்.
இந்த நேரம் பார்த்து 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பணியாற்றும் திமுகவினர் சாப்பிடக் கூட பணமில்லாமல் திண்டாடுவதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால், அதிமுகவினர் ஆடம்பரமாக செலவழித்து கொண்டாடி வருகிறார்களாம்.
4 தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டிய படிவங்களில் கைரேகை வைத்தார் என செய்திகள் வந்தன. ஆனால், தற்போது திடீரென தேர்தலை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறி வருகிறார். வீட்டு சாப்பாடு சாப்பிடுகிறார், நாற்காலியில் உட்காருகிறார், வேறு அறைக்கு மாற இருக்கிறார், வீட்டுக்குச் செல்லும் தேதியை அவரே முடிவு செய்வார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், ஓரிரு நபர்களைத் தவிர அவரை நேரில் கண்டு நலம் விசாரித்தவர்கள் யாரும் இல்லை. இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்கு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏழை, எளிய அடுத்தட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் துயரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கோ, அமைச்சர்களுக்கோ நேரம் இல்லை. நினைப்பும் இல்லை.
அதிமுக ஆட்சியில் விவசாயிகள் விரக்தியை விதைத்து வேதனையை அறுவடை செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லவோ, நிவாரணம் வழங்கவோ முன்வராத ஜெயலலிதா, அவசர அவசரமாக வாக்களிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அதிமுகவினர் எதை முக்கியமாகக் குறி வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.
வழக்கமாக இடைத்தேர்தல்களில் ஏற்படும் வன்முறைகள், வசைமாரிகளுக்கு செவி சாய்க்காமல், யாருடைய ஆத்திரத்தையும் தூண்டாமல், அமைதியான முறையில் திமுகவினர் வாக்கு சேகரிக்க வேண்டும். காந்தியடிகளின் அகிம்சை வழியிலும், பெரியார் வலியுறுத்திய மனிநேயத்துடனும், அண்ணா, காமராஜர் போற்றிய அறவழி, அன்பு வழியை மறக்காமல் திமுகவினர் செயல்பட வேண்டும்.
இந்த 4 தொகுதி தேர்தல் மூலம் செயல் திறனற்ற அதிமுக அரசுக்கு நல்லதொரு பாடம் புகட்டி, நல்வழிப்படுத்த வேண்டும். அதற்காக தமிழகத்தில் 3 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களையும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.