

சென்னை: காசிக்கும் தமிழகத்துக்குமான பண்டைய தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில், காசியில் ஒரு மாதம் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
காசி தமிழ் சங்கமம் குறித்து அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாரதத்தின் செம்மைமிக்க பரிணாமப் பயணத்தில், தமிழகத்தின் பங்கு மகத்தானது. ராமேஸ்வரத்துக்கும், காசிக்கும் இடையில்ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்துள்ளனர். காசி- ராமேஸ்வர யாத்திரை, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத அங்கமாகவே பார்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மீதான காசியின் செல்வாக்குஅளப்பரியது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் மனோன்மணீயம் சுந்தரனார். இவருடைய குருநாதர் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள், தம்முடைய வாழ்வின் பெரும்பகுதியைக் காசியின் மணிகர்ணிகா படித்துறைபகுதியில் கழித்தார். சுவாமி விவேகானந்தருக்கு சைவ சித்தாந்தத்தைப் போதித்தவரான மனோன்மணீயம் சுந்தரனார், காசியினால் நிரம்பவும் வசீகரிக்கப்பட்டிருந்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார், கல்விக்காகக் காசியில் தங்கியிருந்தார். இன்றளவும்,மகாகவியின் குடும்ப வழித்தோன்றல்கள், காசியில், அனுமன் கட்டடத்துக்கு அருகில் வசிக்கின்றனர். மேலும், ஏராளமான தமிழ்க்குடும்பங்கள் இப்போதும் காசியில் வசிக்கின்றன. காஞ்சிக்கும் காசிக்கும் நெடிய தொடர்பு இருந்துள்ளது. காஞ்சிப் பட்டும், காசி பனாரஸ்பட்டும் உலகப் புகழ் பெற்றவை. தமிழகத்துக்கும் காசிக்கும் இடையே பன்முக, ஆழ்ந்தவளமைமிக்க வரலாறு, மீள் கண்டுபிடிப்புக்காகக் காத்திருக்கிறது.
பாரதம் குறித்த ஆழமான மற்றும் துல்லியமான புரிதலைக் கொண்ட பிரதமர் மோடியின்தலைமையின்கீழ், இந்தத் தொடர்பு மறுவாழ்வு பெறவுள்ளது. காசி தமிழ் சங்கமத்துக்கு பிரதமர் மோடி தந்திருக்கும் ஊக்கமும் ஆக்கமும், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பதில் அவருக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கை, ஈடுபாட்டைக் காட்டுகி்றது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.