

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் வங்கியில் பொதுமக்களுக்கு உதவிக்கொண்டிருந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமடைந்தார்.
தரங்கம்பாடி இந்தியன் வங்கியில் காசாளராகப் பணியாற்றி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றவர் பொறையாரைச் சேர்ந்த மதியழகன்(59).
இவர், அவ்வப்போது வங்கிக்கு வந்து, பணியாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு, சலான் நிரப்புவது உள்ளிட்ட உதவிகளைச் செய்துவந்துள்ளார். கடந்த சில தினங்களாக தரங்கம்பாடியில் வங்கிக்கு வரும் பொதுமக்களுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வது உள்ளிட்ட பணிகளைச் செய்து, வங்கி ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் உதவிக்கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில், இதய நோயாளியான மதியழகன் நேற்று முன்தினம் மாலை வங்கியில் இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
இதுகுறித்து வங்கிப் பணியாளர்கள் கூறும்போது, “மதியழகன் தனது சொந்த அலுவல் காரணமாகத்தான் வங்கிக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார்” என தெரிவித்தனர்.