ரூ.237 கோடியில் 9 மகளிர் தொழில் பூங்காக்கள்; 13 புதிய தொழிற்பேட்டைகள்: அமைச்சர் மதன் ராஜா தகவல்

ரூ.237 கோடியில் 9 மகளிர் தொழில் பூங்காக்கள்; 13 புதிய தொழிற்பேட்டைகள்: அமைச்சர் மதன் ராஜா தகவல்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் 13 புதிய தொழிற்பேட்டைகள், ரூ.237 கோடியில் 9 மகளிர் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மதன் ராஜா அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் பெ.மதன் ராஜா நேற்று வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: கைவினைத் தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ‘வெற்றி கைவினைக் கலைஞர்கள்’ திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன்கீழ் திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு 50 சதவீத மானியம் தரப்படும். முதலீட்டு மானியத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நெடுங்காலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மானியம் வழங்க ரூ.600 கோடி ஒதுக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் சென்சார் தொழில்நுட்பம்பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க ரூ.30 கோடியும், மின்வாகன உதிரிபாகங்களின் உற்பத்தியில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கு முதலீட்டு மானியம் வழங்க ரூ.20 கோடியும் நிதி ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.100 கோடியில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கான விளிம்புத் தொகை உதவித்திட்டம் செயல்படுத்தப்படும்.

மகளிர் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர் பயன்பெறும் வகையில் சிட்கோ மூலம் 8 மாவட்டங்களில் ரூ.237 கோடியில் 9 புதிய மகளிர் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும். சிட்கோ மூலம் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், ரூ.171 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்க்க தமிழ்நாடு ஸ்டார்ட் ஸ்மார்ட் சீட் பண்ட் திட்டத்தில் நிதியுதவி ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுவதுடன், ரூ.100 கோடியில் புத்தொழில் முதலீட்டு நிதியமும் அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி சூளகிரியில் புதிய மருந்தியல் பூங்கா ரூ.48 கோடியிலும், திருச்சி சூரியூரில் மருத்துவத் தொழில்நுட்ப பூங்கா ரூ.2 கோடியிலும், திருவண்ணாமலை செங்கத்தில் புதிய தொழிற்பேட்டை ரூ.18 கோடியிலும், பொள்ளாச்சியில் புதிய தென்னை தொழிற்பேட்டை ரூ.1.5 கோடியிலும், விழுப்புரத்தில் புதிய தொழிற்பேட்டை ரூ.20.60 கோடியிலும் அமைக்கப்படும்.

பெரம்பலூர், மயிலாடுதுறை, கன்னியாகுமரி மற்றும் சேலத்தில் புதிய தொழிற்பேட்டைகள் சிட்கோ மூலம் ஏற்படுத்தப்படும். திண்டுக்கல் பூட்டு, ஆத்தங்குடி டைல்ஸ் உட்பட 4 புதிய பொது வசதி மையங்கள் ரூ.32.95 கோடியில் நிறுவப்படும்.

சேலம் இளம்பிள்ளை நெசவுக் குழுமத்துக்கு பொது வசதி மையம் ரூ.9.89 கோடியிலும், ஓசூரில் பொறியியல் பாகங்கள் உற்பத்திக்கான புதிய தனியார் தொழிற்பேட்டையும், உலக தரத்திலான தொழில் வளர் காப்பகமும் அமைக்கப்படும் என்பன உள்பட 35 அறிவிப்பு களை அமைச்சர் வெளியிட்டார்.

பட்டு வளர்ச்சித் துறை

பட்டு வளர்ச்சி துறையில் மின் ஆளுமை மையம் மற்றும் ‘பட்டு செயலி' (Silk App) ரூ.50 லட்சத்தில் உருவாக்கப்படும். இத்துறையில் சிறந்து விளங்கும் நாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ரூ.50 லட்சத்தில் பட்டு விவசாயிகள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

600 விவசாயிகளுக்கு தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.6.37 கோடியில் நிதியுதவி வழங்கப்படும். ஓசூரில் 600 பட்டு விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தொழில் குறித்த பயிற்சி அளிக்கப்படும்.

சர்வதேச அளவில் 10 முக்கிய நகரங்களில் ரூ.4.18 கோடியில் கைவினைப் பொருட்களின் கண்காட்சிகள் நடத்தப்படும்.

960 கைவினைஞர்களுக்கு வடிவமைப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் ரூ.2.35 கோடியில் அளிக்கப்படும். தஞ்சாவூரில் பாரம்பரிய கைவினை சுற்றுலா கிராமம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என்பன உட்பட 11 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன

ரூ.237 கோடியில் 9 மகளிர் தொழில் பூங்காக்கள்; 13 புதிய தொழிற்பேட்டைகள்: அமைச்சர் மதன் ராஜா தகவல்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 02 செப். 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in