தி.மலை | கமண்டல ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கழுத்தளவு தண்ணீரில் நடந்து உயிரிழந்தவரின் உடலை சுமந்து செல்லும் உறவினர்கள்

தி.மலை | கமண்டல ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கழுத்தளவு தண்ணீரில் நடந்து உயிரிழந்தவரின் உடலை சுமந்து செல்லும் உறவினர்கள்
Updated on
1 min read

திருவண்ணாமலை: படைவீடு அருகே கமண்டல ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் நடந்து உயிரிழந்தவரின் உடலை உறவினர்கள் கொண்டு சென்று இறுதி சடங்கு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படைவீடு ஊராட்சி ராமநாதபுரம் கிராம மக்கள், கமண்டல நதிக்கரையில் உள்ள மயானத்தில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்து வருகின்றனர். இதற்காக, கமண்டல நதியை கடந்து செல்ல வேண்டும். இந்தச் சூழலில், கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழைக்கு செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கமண்டல நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் கொல்லைமேட்டில் வசித்த பரசுராமன்(40) என்பவர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். அவரது இறுதி சடங்கு நடைபெற்றது. இதற்காக, கமண்டல நதியில் கழுத்தளவு தண்ணீரில் பரசுராமன் உடலை உறவினர்கள் சுமந்து வந்து, இறுதி சடங்கு செய்தனர். தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், உறவினர்கள் பலரும் அச்சத்துடன் ஆற்றை கடக்காமல் கரையிலேயே நின்றுவிட்டனர்.

இது குறித்து பரசுராமனின் உறவினர் அமுல்ராஜ் கூறும்போது, “ராமநாதபுரம் கொல்லைமேடு, மல்லிகாபுரம், கமண்டலாபுரம், தஞ்சான்பாறை, இருளம்பாறை, நடுவூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் ஆற்றை கடந்துதான் ரேணுகொண்டாபுரம் பள்ளிக்கும், வேலூர், ஆரணி போன்ற இடங்களில் உள்ள கல்லூரிகளுக்கும் சென்று படிக்க வேண்டியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உடலை கூட நிம்மதியாக கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியவில்லை. மரண பயத்தில் ஆற்றை கடக்க வேண்டிய நிலையில் வாழ்கிறோம். இதற்கு தீர்வு காண தமிழக அரசும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in