Last Updated : 18 Nov, 2022 05:57 PM

2  

Published : 18 Nov 2022 05:57 PM
Last Updated : 18 Nov 2022 05:57 PM

“2 படங்களில் நடித்துவிட்டால் கலைமாமணி விருது வழங்கலாம் என்ற நிலை” - உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமர்சனம்

மதுரை: ‘கலைத் துறையில் சாதனைகள் செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது விருது, கலைமாமணி விருது. தற்போது 2 படங்களில் நடித்துவிட்டால் விருது வழங்கலாம் என்ற நிலை உள்ளது’ என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மதி, 36 முதல் 50 வயது வரை கலை சுடர்மணி, 51 முதல் 60 வயது வரை கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது வழங்கப்படுகிறது. கலைமாமணி விருதுக்கு இதுவரை வயது வரம்பு, தகுதி வகுக்கப்படவில்லை.

சென்னையில் 2019-2020ம் ஆண்டுக்கான கலைமாமமணி விருது 20.2.2021-ல் வழங்கப்பட்டது. இதில் தகுதியில்லாத நபர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் தலைவரின் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெறக் கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? விருதுக்கு எவ்வாறு கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்? விருதுகளுக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது? கலைகள் பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், “கலைத் துறையில் சாதனைகள் செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டியது விருது, கலைமாமணி விருது. தற்போது 2 படங்களில் நடித்துவிட்டால் விருது வழங்கலாம் என்ற நிலை உள்ளது. 2021-ல் 2019-2020 ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கியது குறித்தும், தற்போது வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர், உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 28-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x