ஆர்டர்லி முறையை பின்பற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சிஆர்பிஎஃப் வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி ஆடர்லி முறையை பின்பற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட காவலர் முத்து என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கடந்த 2004-ம் ஆண்டு காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை பார்த்தபோது எனது உயர் அதிகாரி தன்னை ஆடர்லி வேலை பார்க்க உத்தரவிட்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.

காவலர் பணிக்கான அனைத்து வேலைகளும் செய்யத் தயாராக இருந்தேன். உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ஆடர்லியாக பணிபுரிய மறுத்ததால், பழிவாங்கும் நோக்கில் என்மீது குற்றச்சாட்டுகளைக்கூறி பணி நீக்கம் செய்யப்பட்டேன். எனவே, எனது பணி நீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 மனிதர்கள் கண்ணியமாக நடத்தப்ப வேண்டும் என்று கூறுகிறது. கண்ணியத்தோடு வாழ்வதற்கான உரிமை அந்தச் சட்டப் பிரிவு வழங்கியுள்ளது. காவலரை ஆடர்லியாக பணிபுரிய வற்புறுத்துவது கண்ணியத்துக்கு எதிரான நடவடிக்கை. எனவே, மனுதாரரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்வதாக கூறி உத்தரவிட்டார்.

மேலும், மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஆர்டர்லி முறையை ஒழிக்கும் மத்திய அரசின் உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஆர்டர்லி முறையை பயன்படுத்தி வீரர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை உயர் அதிகாரிகள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in