Last Updated : 18 Nov, 2022 12:46 PM

3  

Published : 18 Nov 2022 12:46 PM
Last Updated : 18 Nov 2022 12:46 PM

10% இட ஒதுக்கீடு | புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் கைது

புதுச்சேரியில் 10 சதவீதஇட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம்.

புதுச்சேரி: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கண்டித்து புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்த எம்.பி., முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எம்எல்ஏ.,க்கள் மற்றும் ஏராளமான கட்சியினரை போலீஸார் தடுத்து கைது செய்தனர்.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறைப்படுத்த கூடாது என்பதை திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்-எல்), மாணவர் கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டமைப்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சமூக நீதிப் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழர் களம் அழகர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு, பெரியார் சிந்தனையாளர் இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, அம்பேத்கர் தொண்டர் படை ஆகிய கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து இக்கட்சியினர் வலியுறுத்தினர். அப்போது அதிகாரிகள், இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கூறினர். ஆனால், இப்போது அரசு வெளியிட்டுள்ள பணி தேர்வு அறிவிப்புகளில் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்களின் உத்தரவுகளை மீறி அதிகாரிகள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி இன்று (நவ.18) தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு எடுத்தனர்.

அதன்படி இன்று காலை புதுச்சேரி காமராஜர் சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தலைமைச்செயலகத்தை முற்றுகையிட வந்தனர். அவர்களை மணக்குள விநாயகர் கோயில் அருகே போலீஸார் தடுப்புகளை வைத்து தடுத்தனர். இதையடுத்து போலீஸார் எம்பி வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் சம்பத், அனிபால் கென்னடி, செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் சலீம், விடுதலைச்சிறுத்தைகள் தேவபொழிலன் உட்பட பல்வேறு அமைப்பினர் ஏராளமான தொண்டர்களை பல வாகனங்களில் போலீஸார் கைது செய்தனர்.

நேற்று நடந்த பாமக போராட்டத்தில் குறைந்தஅளவே போலீஸார் இருந்த சூழலையடுத்து எஸ்எஸ்பி தீபிகா தலைமையில் மூன்று எஸ்பிக்கள் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்துக்கு தலைமை வகித்த எதிர்க்கட்சித்தலைவர் சிவா கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர், பழங்குடியின மக்களே மிகவும் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் வாழும் முற்பட்ட வகுப்பினர் குறித்த தெளிவான புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை. இதுபோன்ற நிலையில் புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

மேலும் புதுச்சேரி அரசுப்பணிகளில் பெரும்பான்மையான இடங்களை முற்பட்ட வகுப்பினரே தட்டிப் பறித்துக் கொள்ளும் நிலையே ஏற்படும். புதுச்சேரி மாநிலத்தில் குரூப் சி பதவிகளுக்கான பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் (ஓபிசி -10%, எம்பிசி 18%, இபிசி 2%, இபிஎம் 2%, பி.டி.5%) இட ஒதுக்கீடுகளையே குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத அலுவலர் பணியிடங்களிலும் பின்பற்ற புதுச்சேரி மாநில அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து அரசாணை பிறப்பித்திட வேண்டும்.

புதுச்சேரி அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் குளறுபடிகள் இன்றி, புதுச்சேரியில் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி புதுச்சேரி மக்களுக்கே கிடைக்கச் செய்யும் வகையில் மாநில தேர்வாணையும் அமைத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தினோம். இப்போராட்டத்திற்கு பின்னரும் அரசு புதுச்சேரி மாநிலத்தில் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை பின்பற்றி அரசுத்துறை வேலை வாய்ப்புகள் அனைத்தையும் புதுச்சேரியில் உள்ள ஓபிசி, எம்பிசி, இபிடி, இபிஎம், பிடி ஆகியோருக்கு கிடைக்கச் செய்ய தவறினால் எங்களது போராட்டங்கள் தொடரும்" என்று குறிப்பிட்டார். இப்போராட்டத்தில் இக்கூட்டணியில் உள்ள சிபிஎம் பங்கேற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x