Published : 18 Nov 2022 05:32 AM
Last Updated : 18 Nov 2022 05:32 AM

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர் நியமனம் செல்லாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்கள் நியமனங்கள் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர், அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெற்றிருக்கவில்லை என்று கூறி, அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார்.

தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி ஆர்.பிரேமலதா, எஸ்.சாந்தி, ஏ.மேகலா, ஏ.பாலமுருகன், எம்.முருகதாஸ், ஜி.ரமேஷ்கண்ணன், கே.கென்னடி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சந்திரசேகர், தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் ரவிச்சந்தர், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வழக்கறிஞர் எம்.பழனிமுத்து, எதிர் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திலகவதி மற்றும் வழக்கறிஞர்கள் ஜி.சங்கரன், எம்.ரவி, ஞானசேகர் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆராய வேண்டும் என்றும், அவர்களது கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்கவேண்டுமெனவும் உத்தரவிட்டி ருந்தார்.

அதன்படி, கல்லூரிக் கல்விஇயக்குநர் 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து, உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.அதில், ஆசிரியர் பணி அனுபவத்துக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்று பிறப்பித் துள்ள உத்தரவில், ‘‘தேர்வு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உதவிப்பேராசிரியர் நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை என்றும், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x