

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற மோதல் தொடர்பாக, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன், கட்சியின் மாநில எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
2024 மக்களவைத் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நவ.15-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, கட்சியின் அமைப்பு தேர்தலில் தமக்கு பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி, சத்தியமூர்த்தி பவனுக்கு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வரும்போது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, ரூபி மனோகரன் தமது நாங்குநேரி தொகுதியில் இருந்து 6 பேருந்துகளில் 400-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில், ரூபி மனோகரன் எழுந்து தனது தொகுதியில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் 3 வட்டாரங்களில் ஒன்றுதான் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சேபம் தெரிவித்தார். தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து நீக்கி, அத்தொகுதியில் உள்ள 3 வட்டாரத் தலைவர் பதவியையும் தனது பரிந்துரையின் பேரில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போது குறுக்கிட்டு பேசிய அழகிரி, கட்சி அமைப்பு தேர்தல், தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். பின்னர் அழகிரியின் வாகனம் வெளியே செல்ல முடியாத வகையில் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அடியாட்களை அழைத்துவந்து விரும்பத்தகாத செயல் நடைபெறுவதற்கு ரூபி மனோகரன்தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கே.எஸ்.அழகிரி பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இத்தீர்மானத்தில் 62 மாவட்டத் தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர். இந்த தீர்மானம் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரூபி மனோகரன், மாநில எஸ்சி அணி தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோருக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசாமி தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதங்களில், “வரும் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் நேரில் ஆஜராகி 15-ம் தேதி நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு நீதி: சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும்போது, “ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரிய தீர்மானம் தொடர்பான உயர்மட்ட கூட்டத்தில், மோதல் விவகாரத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களும் கட்சித் தொண்டர்கள்தான். அவர்களுக்கு நீதி வேண்டும். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். யாரும் புகார் அளிக்கவில்லை என நிர்வாகிகள் கூறினர். எனது கருத்தையே புகாராக எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறேன்” என்றார்.
கே.எஸ்.அழகிரியையும் விசாரிக்க வேண்டும்: ரூபி மனோகரன் வலியுறுத்தல்
ஒழுங்கு நடவடிக்கைக் குழு நேரில் வந்து விளக்கம் தர அழைத்திருப்பது தொடர்பாக கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் கூறியதாவது: என் மீது எந்த தவறும் இல்லை. நான் யாரையும் அழைத்து வரவில்லை. கலவரமும் செய்யவில்லை. கடைக்கோடி தொண்டன் கோரிக்கையோடு சென்னைக்கு வருகிறான். அவர்களுக்கு ஒரு தலைவனால் பதில் அளிக்க முடியவில்லை. மோதல் விவகாரத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அதனால் அழகிரியையும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டும்.
என் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் சிலர் செயல்படுகிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். தொண்டர்களின் நியாயமான கோரிக்கைகளையும், கே.எஸ்.அழகிரியின் பழிவாங்கும் போக்கையும் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் நிச்சயமாக தெரிவிப்பேன். தர்மமும், நியாயமும் ஒருநாள் வென்றே தீரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.