

சென்னை: கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி, சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மாலை அணிந்து பக்தர்கள் விரதத்தை தொடங்கி உள்ளனர். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நடைபெறும்.
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மண்டல பூஜைக்காக கோயில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. பின்னர், கோயில்முன்புறம் உள்ள ஆழி குண்டம்ஏற்றப்பட்டு, மாலை 6 மணியளவில் அபிஷேகம் நடத்தி, இரவு10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் நேற்று அதிகாலை3 மணி அளவில் நடை திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் மாலை அணிய தொடங்கி உள்ளனர்.
கார்த்திகை மாதம் பிறந்தாலே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பாதயாத்திரையாக ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் செல்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜைக்காகவும், மகரஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று தமிழகம் முழுவதும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். அதிகாலையில், நீராடி பல்வேறு கோயில்களில் குருசாமி தலைமையில் பக்தர்கள் மாலை அணிந்தனர்.
அந்த வகையில், சென்னைகோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனர். ஐயப்ப பக்தர்களுக்கு குருசாமிகள் மாலை அணிவித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை அணிந்து கொண்டனர். அப்போது, ‘சாமியே சரணம்’ என்ற பக்திகோஷம் பக்தர்கள் மத்தியில் எதிரொலித்தது.
பின்னர், ஐயப்பனை தரிசித்து பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். இங்கு கன்னிசாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். இதுபோன்று சென்னை கே.கே.நகர், அண்ணாநகர், ராஜா அண்ணாமலை புரம், மாதவரம் பால் பண்ணை ஆகிய பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயிலிலும் பக்தர்கள் அதிகாலை முதலே கோயில் முன் திரண்டு மாலைஅணிந்து விரதத்தை தொடங்கினர்.