

பூந்தமல்லி, நசரத்பேட்டை பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நசரத்பேட்டை போலீஸார் பூந்தமல்லி லட்சுமிபுரம் சாலை கரையான்சாவடி சந்திப்பில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, சந்தேகத்தின்பேரில், 6 நபர்களையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர்களின் பெயர் மாரீஸ்வரன் (31), விஜயராகவன் (23), சுரேஷ் (25), கார்த்திகேயன் (29), சண்முகம் (28), செந்தில்குமார் (27) என்பது தெரிந்தது. 6 பேரும் சேர்ந்து பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும், தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பேரில் 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்கள், 34 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.