

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (புதன்கிழமை) காலை 8.30 மணிக்கு மேலும் வலுப்பெற்று புயலாக உருவானது. இந்தப் புயலுக்கு 'நாடா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி 'நாடா' புயல் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் டிசம்பர் 2-ம் தேதியன்று வேதாரண்யம் - புதுச்சேரிக்கு இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
சென்னையில் நாளை முதல் மழை:
அவர் மேலும் கூறும்போது, 'நாடா' புயல் காரணமாக சென்னையில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.