

வண்ணாரப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில் பைக்கில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார்.
சென்னை வியாசர்பாடி தாமோதரன் நகரைச் சேர்ந்தவர் மணி. இவர் தீபாவளியையொட்டி வீட்டில் செய்த பலகாரத்தை ராயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் கொடுப்பதற்காக மகள் துர்காவுடன் பைக்கில் சென்றார். தங்கசாலை மேம்பாலத்தில் சென்றபோது எங்கிருந்தோ அறுந்து வந்த மாஞ்சா நூல், துர்காவின் கழுத்தை இறுக்கியது. இதில் நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர்.
மாஞ்சா நூல் அறுத்ததில் துர்காவின் முகம், கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வண்ணாரப் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டன் தெருவில் மணி என்பவர் மாஞ்சா நூல், பட்டம் தயாரித்து விற்பனை செய்தது தெரிந் தது. அவரை நேற்று காலை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான காற்றாடி, மாஞ்சா நூல் பண்டல்கள், மாஞ்சா நூல் தயாரிக்க வைத்திருந்த மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாஞ்சா நூல் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், அதை பயன்படுத்தி பட்டம் விடுவதையும் சென்னை பெருநகர காவல் துறை தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.