ராஜபாளையம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மாற்றுத்திறனாளி தாய், மகன்கள் பரிதவிப்பு

ராஜபாளையம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மாற்றுத்திறனாளி தாய், மகன்கள் பரிதவிப்பு
Updated on
1 min read

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் கோரையாறு காலனியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே செல்ல முடியாமல் மாற்றுத்திறனாளி தாய், மகன்கள் பரிதவித்து வருகின்றனர்.

ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக தேவதானம் சாஸ்தா கோயில் அணை நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள பல கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

இந்நிலையில், கனமழை பெய்ததால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. தேவதானம் அருகே கோரையாறு காலனியில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

அதில் சண்முகசுந்தரம் என்ற கூலி தொழிலாளி தனது மாற்றுதிறனாளி மனைவி முனியம்மாள் (63), மற்றும் மாற்றுத்திறனாளி மகன்களான அய்யனார் (40), பழனி(42) ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள் மூவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக கூட வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது குறித்த புகாரில் ராஜபாளையம் வட்டாட்சியர் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க என தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் மூவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in