Published : 17 Nov 2022 04:12 PM
Last Updated : 17 Nov 2022 04:12 PM

தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் தொன்றுதொட்டு ஒற்றுமை உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி

ரயிலை கொடி அசைத்து துவக்கிவைத்த ஆளுநர்

சென்னை: தமிழகத்துக்கும் வாரணாசிக்கும் கலாச்சார ரீதியாக, பண்பாடு ரீதியாக தொன்றுதொட்டு தொடர்பும் ஒற்றுமையும் இருந்து வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

உத்திரப் பிரதேசம் மாநிலம் காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து புறப்படும் முதல் குழுவின் ரயிலை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ் மக்களின் இதயங்களில் காசி வாழ்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க இந்தப் பயணம் நிறைவேற்றும். நீண்ட காலமாக நம் நாட்டில் உள்ளதை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சி இது. ஒரே பாரதம்தான் உன்னத பாரதம். அதற்கு இதுவே உதாரணமாகத் திகழ்கிறது.

இந்தியாவை புரிந்துகொண்டவர்கள் பாரதத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் காசிக்குப் போக வேண்டும், காசியில் இருந்து வருபவர்கள் இங்கு வர வேண்டும். அதுவே பாரதம். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதுவே பாரதம்.

தமிழ்நாட்டிற்கும், வாரணாசிக்கும் கலாச்சார ரீதியாக, பண்பாடு ரீதியாக தொன்றுதொட்டு தொடர்பு மற்றும் ஒற்றுமை இருந்து வருகிறது. தூரம் காரணமாக நாம் அதை தற்காலிமாக மறந்துவிட்டோம். நிரந்தரமாக அதை மறக்கவில்லை. அதை மீட்கும் வகையில் இந்த காசி தமிழ் சங்கமம் நடக்கிறது.

காசியில் படகோட்டும் பலரும் என்னை விட நன்றாக தமிழில் பேசுவார்கள். இரண்டு ஊர்களுக்கும் இடையே இருந்த கலாச்சார தொடர்பாக ஏற்படுத்தும் வகையில் ஒரு மாதத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x