Published : 17 Nov 2022 03:35 PM
Last Updated : 17 Nov 2022 03:35 PM

ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் | அதிமுக செய்த துரோகத்தை திமுக அரசும் தொடர்வது கொடுங்கோன்மை: சீமான் 

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "ரப்பர் தோட்டங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமானம் வரும் நிலையில், கூலி உயர்வு தரமறுத்து தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் தமிழ்நாடு அரசின் செயல் அப்பட்டமான உழைப்புச் சுரண்டலேயாகும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கடந்த 6 ஆண்டுகளாக உரிய ஊதிய உயர்வினை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. ஊதிய உயர்வு வழங்குவதாகப் பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, உறுதியளித்துப் பின் மீண்டும் மீண்டும் ஏமாற்றி, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களை வீதியில் இறங்கிப் போராட வைத்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

கடந்த 1964 ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலத்தில், தொழிற்வாய்ப்புகள் குறைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்தோடு கீரிப்பாறை, காளிதேசம், பரளியாறு, மணலோடை, மருதம்பாறை உள்ளிட்ட 9 கோட்டங்களில் அரசு ரப்பர் தோட்டக் கழகம் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 5000 ஹெக்டர் பரப்பளவில், 5000 தோட்டத் தொழிலாளர்களுடன் தொடக்கத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த அரசு ரப்பர் கழகம் இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையினால் தற்போது முற்று முழுதாகச் சீரழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை ஊதியம் உள்ளிட்ட எவ்வித உரிமையும் வழங்காத காரணங்களினால் தற்போது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதிலும் தினக்கூலிகளாகப் பணிபுரிந்து வரும் 900 தொழிலாளர்களை வேலையில்லை என்று கூறி வாரத்தில் பல நாட்கள் அதிகாரிகள் திருப்பி அனுப்பும் கொடுமைகளும் அரங்கேறுகின்றது. அதுமட்டுமின்றி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைப்படுத்த வேண்டிய ஊதிய உயர்வு ஒப்பந்தமும் கடந்த 2019 ஆண்டு முதல் நிறைவேற்றப்படவில்லை என்பதும் வேதனையின் உச்சமாகும்.

மேலும், ரப்பர் தோட்டங்களில் மறுநடவுப் பணிகளை உரிய காலங்களில் மேற்கொள்ளத் தவறுவதோடு, அவ்வப்போது செய்யவேண்டிய களையெடுப்புப் பணிகளையும் நிர்வாகம் முறையாகச் செய்வதில்லை. அது மட்டுமின்றி ரப்பர் கழகத்திற்குச் சொந்தமான நிலங்களை வனத்துறையிடம் ஒப்படைத்து தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பதாகவும் ரப்பர் கழக அதிகாரிகள் மீது அங்குப் பணியாற்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வினை வழங்குவதாக, ஓராண்டுகாலத் தாமதத்திற்குப் பிறகு அன்றைய அதிமுக அரசு 31.12.2021 அன்று உறுதியளித்த நிலையில், ஆட்சி முடியும்வரை அதனை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசுடனும் ரப்பர் தோட்டத் தொழிற்சங்க நிர்வாகிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், இன்றுவரை ஊதிய உயர்வினை வழங்காமல், அதிமுக அரசு செய்த அதே துரோகத்தை திமுக அரசும் தொடர்வதென்பது கொடுங்கோன்மையாகும்.

இந்நிலையில், கடந்த 16.08.2022 அன்று சென்னையில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர், தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் நாளொன்றுக்கு ரூ.40 ஊதியம் உயர்த்தி வழங்க உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதையும் நாகர்கோயில் ரப்பர் கழக அதிகாரிகள் தர மறுப்பதால், தொழிலாளர்கள் தொடர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசின் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழியை, அதிகாரிகள் நிராகரிப்பார்கள் எனில் இந்த அரசை நடத்துவது யார்? அரசிற்கு அதிகாரிகள் கட்டுப்பட மறுக்கிறார்களா என்ற கேள்விகளும் எழுகிறது.

ரப்பர் தோட்டங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமானம் வரும் நிலையில், கூலி உயர்வு தரமறுத்து தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் தமிழ்நாடு அரசின் செயல் அப்பட்டமான உழைப்புச் சுரண்டலேயாகும். தற்போதைய வேலை நிறுத்தத்தால் நாள்தோறும் அரசுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் நட்டம் ஏற்பட வழி வகுத்திருப்பது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

ஆகவே, 67 கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு, தனது பிடிவாதப்போக்கினை இனியாவது கைவிட்டு, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்குவதோடு புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும், தினசரி கூலிகளாகப் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான அரசு ரப்பர் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் நோக்குடன் செயல்படும் அதிகாரிகளை உடனடியாகப் பணியிடமாற்றம் செய்து, ரப்பர் கழகத்தை மீண்டும் புதுப்பொலிவுடன் லாபகரமாக இயங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும் வரை அவர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்து துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x