மாணவர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் பொதுப் போக்குவரத்து வசதிகள் அவசியம்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டம்
Updated on
1 min read

சென்னை: மாணவர்கள் சிரமமின்றி சென்று வரும் வகையில் பொதுப் போக்குவரத்து வசதிகள் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் முதல் கூட்டம் இன்று தமிழக முதல்வரும், குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,"சென்னை நகர போக்குவரத்து நெரிசல் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். பெருகிவரும் மக்கள் தொகைக்கும் நகர விரிவாக்கத்திற்கும் ஏற்ப நாம் போக்குவரத்து வசதிகளை திட்டமிட்டுப் பெருக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து முறை நமது தலைநகரில் அமைய வேண்டும்.

பொதுப் போக்குவரத்து எந்த அளவிற்கு சிறப்பாக கட்டமைக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு சாலைகளில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்து நெரிசலும் குறையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதே அளவுக்குக் குறையும். எனவே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்பானது தனது பணிகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

இதில் நான் குறிப்பாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது, பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி சென்று வரும் வகையில், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் அவை காலையில் துவங்கி மாலையில் முடியும் நேரத்தை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்றும் இந்தத் தருணத்தில் கேட்டுக்கொண்டு, மீண்டுமொரு முறை இந்த அமைப்பின் தலைவர் என்ற முறையிலே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்" என்று அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in