தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் சிலை வைக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் சிலை வைக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் யாரும் முறையாக அனுமதி பெறாமல் சிலை அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்க உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார்.

அதில், சிலை அமைக்கப்பட்டதும் நடைபெற்ற அமைதிக்க பேச்சுவார்த்தையில் அனுமதி பெறும் வரை சிலையை சுற்றி தகரம் அமைத்து மறைத்து வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சிலை மறைக்கப்பட்டது. இதனால் சிலையை அகற்ற தேவையில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் சாதி மோதல்கள் நடைபெற்றுள்ளன. அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதனால் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கூடாது என்றார்.

வழக்கறிஞரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், சிலை அமைக்க அனுமதி கோரி மனுதாரர் அளித்த மனுவை அதிகாரிகள் நீண்டநாட்களாக நிலுவையில் வைத்திருப்பது ஏன்? இதனால் போலீஸார்தான் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கவே நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை. முறையாக அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முறையாக அனுமதி பெறாமல் யாரும் சிலை வைக்கக் கூடாது. அதை அனுமதிக்கவும் கூடாது. இதனால் மனுதாரர் அனுமதி பெறும் வரை சிலையை திறக்கக் கூடாது. அது தொடர்பாக மனுதாரர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை நவம்பர் 24-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in