

சென்னை: பிரியாவின் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும் என்றும் இவை அனைத்தும் பிரியாவின் உயிருக்கு ஈடாகாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மருத்துவர்களின் கவனக்குறைவான சிகிச்சையால் வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.17) ஆறுதல் கூறினார். மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை மற்றும் மாணவியின் சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணையினை வழங்கினார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,"கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம். ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும், நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது." இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் கூறியுள்ளார்,