

சென்னை: வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை மற்றும் மாணவியின் சகோதரருக்கு அரசு பணிக்கான ஆணையினை வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (17.11.2022) வலது கால் அகற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை செல்வி பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் – உஷா ராணி ஆகியோரது மகளான செல்வி பிரியா, சென்னை ராணிமேரிக் கல்லூரியில் முதலாமாண்டு உடற்கல்வி இளங்கலைப் பட்டப்படிப்பு படித்து வந்தார். இவருக்கு மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அன்று உயிரிழந்தார்.
தமிழக முதல்வர் இன்று, அம்மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்து, நிவாரண தொகையாக ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். அம்மாணவியின் பெற்றோரிடம் உங்களுக்கு ஆதரவாக என்றும் நாங்கள் இருப்போம் என்றும், உங்களின் தேவைகள் குறித்து எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்று ஆறுதல் கூறினார்.
மேலும், அம்மாணவியின் சகோதரருக்கு தேசிய நலவாழ்வு குழுமத்தில் டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் (Data Entry Operator) பணிக்கான ஆணையினையும், அவர்கள் குடியிருக்க தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கவுதமபுரம் திட்டப்பகுதியில் குடியிருப்பிற்கான ஆணையினையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில் குமார், ஆகியோர் உடனிருந்தனர்.