

சட்டப்பேரவை நிகழ்வுகளை இணை யத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட நட வடிக்கை என்ன என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வு களை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த், லோக் சத்தா கட்சி சார்பில் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கடந்த 2013-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இது தொடர் பாக ஏற்கெனவே தமிழக சட்டப் பேரவைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் அவைக்குறிப்புகள் மட்டும் அவ்வப்போது உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதியைக் கொண்ட முதல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேமுதிக தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், ‘‘2 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட சட்டப்பேரவைச் செயலரின் பதில் மனுவில் கூறியுள்ளபடி, பேரவை நிகழ்வுகளை இணையத்தில் பதி வேற்றம் செய்யும் நடைமுறை இன் னும் அமல்படுத்தப்படவில்லை’’ என வாதிட்டார்.
அரசு தெளிவுபடுத்த வேண்டும்
இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஏற்கெனவே பேரவைச் செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளார். அதன்படி, இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எழுத்துப்பூர்வமான பதிவுகளை இணையதளத்தில் பதிவேற்றுவது பற்றி தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.