

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக, வீடு இடிந்து பெண் காயமடைந்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது.
காரமடை, வெள்ளியங்காடு, மருதூர், கெம்மாரம்பாளையம், தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், சிக்காரம்பாளையம், பெள்ளேபாளையம், பெள்ளாதி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
திம்மம்பாளையம், புங்கம்பாளையம் பிரிவு பகுதிகளில் குட்டைகள் நிரம்பி சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. 20-க்கும் மேற்பட்ட குட்டைகளும் நிரம்பின. இந்த மழையால், பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட சின்ன தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து சேதமடைந்தது.
இதில் பெண் ஒருவர் காயமடைந்தார். பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னம்பாளையத்தில் உள்ள குட்டையில் மழை நீர் தேங்கியது. மேலும், அங்கிருந்து வெளியேறிய உபரி நீர் அருகிலுள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தேங்கியது. இங்குள்ள கருப்பராயன் கோயில் பகுதியிலும் மழைநீர் தேங்கியது.