

சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி இடிந்து 61 பேர் உயிரிழந்த சம்பவம், திருவள்ளூர் மாவட்டம் உப்பாரபாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து பலர் உயிரிழந்த சம்பவம் ஆகியவற்றில் தேசிய மனித உரிமை கமிஷன் தலையிட வேண்டுமென கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர் தேசிய மனித உரிமைக் கமிஷனில் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 61 பேர் உயிரிழந்துள்ளனர். 47 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குள் உப்பாரபாளையம் கிராமத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 11 அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன.
பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையை தமிழக அரசு செய்யத் தவறி உள்ளது. மனித உரிமையும் மீறப்பட்டுள்ளது.
முறைப்படி மண் பரிசோதனை செய்யப்படாமல் நடந்த சட்ட விரோத கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால் இந்த விபத்து நடந்துள்ளது. திருவள்ளூரில் விபத்து நடந்த பகுதி அருகில் இதுபோன்ற பல சட்ட விரோத குடோன்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்பகுதி செங்குன்றம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. சதுப்பு நில பாதுகாப்புச் சட்டம் 2010 -ஐ மீறி இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் முறைப்படி இப்பகுதியை ஆய்வு செய்தி ருந்தால், இந்த விபத்து நடந்திருக்காது. பலியானோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையும் போதுமானதாக இல்லை. கட்டிட தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தொழிலாளர் நலச் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை.
இந்த விவகாரத்தில் மனித உரிமைக் கமிஷன் தலையிட்டு, தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தையும் கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.