Published : 17 Nov 2022 04:15 AM
Last Updated : 17 Nov 2022 04:15 AM
கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் வன உயிரின பூங்காவில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் 100 யானைகள் வலசை வந்துள்ளன. இவை விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் கூறியதாவது: கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வன உயிரின பூங்காவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் 150-க்கும் மேற்பட்ட யானைகள் தமிழக வனப்பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு வலசை வருவது வழக்கம்.
நிகழாண்டில், இம்மாதம் கர்நாடக மாநிலத்தில் இருந்து பல்வேறு குழுக்களாக இதுவரை100 யானைகள் ஜவளகிரி வனச்சரகத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன. தற்போது, ஜவளகிரி வனச்சரக பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆண்டுதோறும் இடம் பெயரும்யானைகளின் வழித்தடத்தில் உள்ளவிளை நிலங்களில் உள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதால், வனத்தையொட்டியுள்ள கிராம விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனிடையே, யானைகளின் நடமாட்டத்தை ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதேபோல, தேன்கனிக் கோட்டை வனச்சரகர் முருகேசன், ஓசூர் வனச்சரகர் ரவி, ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதி ஆகியோர் வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் தங்களது வனச்சரக பகுதியில் உள்ள யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும், யானைகள் முகாமிட்டுள்ள வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராம மக்களுக்கு வனத் துறை சார்பில் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
சிப்காட் பகுதியில் தஞ்சம்: இதனிடையே, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் 3 யானைகள் முகாமிட்டிருந்தன. அவற்றை நேற்று காலை மேலுமலை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதையடுத்து, யானைகள் மீண்டும் குருபரப்பள்ளி சிப்காட்பகுதிக்கு சென்றன.
தொடர்ந்து நேற்று இரவு யானைகளை மேலுமலை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். யானைகள் முகாமிட்டுள்ள பகுதி அருகே உள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT