Published : 17 Nov 2022 07:11 AM
Last Updated : 17 Nov 2022 07:11 AM

பல்லவன் விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட 22 பவுன் நகைகள் ஒப்படைப்பு: ஆர்.பி.எஃப். காவலர், ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டு

சென்னை: பல்லவன் விரைவு ரயிலில் பெண் பயணி தவறவிட்ட ரூ.8.24 லட்சம் மதிப்பிலான நகைகளை ஒப்படைத்த ஆர்.பி.எஃப். காவலர், ரயில்வே ஊழியர்களை சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் மற்றும் ஆர்பிஎஃப் அதிகாரிகள் பாராட்டினர். காரைக்குடி சந்திப்பில் இருந்து பல்லவன் விரைவு ரயில் புறப்பட்டு, நேற்று நண்பகல் சென்னை எழும்பூருக்கு வந்தது. இந்த ரயிலில் பயணிகள் இறங்கி சென்றபிறகு, ஆர்.பி.எஃப் காவலர் நிரஜ்குமார் பஸ்வான் மற்றும் ரயில்வே ஊழியர்கள் வழக்கமான சோதனை நடத்தினர். அப்போது, ரயிலின் ‘டி’ கோச்சில் ஒரு டிராலி பை இருந்தது.

அதைக் கண்ட நிரஜ்குமார் பஸ்வான், அந்தப் பையை ரயில்வே அலுவலகத்துக்கு எடுத்துவந்து, திறந்து பார்த்தபோது, அதில் 22 பவுன் தங்க நகைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.8.24 லட்சம். இதுகுறித்து எழும்பூர் நடைமேடை அதிகாரியிடம் தகவல் கொடுத்து, ஒப்படைத்தார். இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த ஜாஃபர் அலியின் மனைவி ஜெரினா, தனது டிராலி பையை பல்லவன் விரைவு ரயிலில் தவறவிட்டது தொடர்பாக ரயில் நிலையதுணை மேலாளரிடம் தெரிவித்தார்.

இதன்பேரில், நடைமேடை அதிகாரியிடம் நிலைய துணை மேலாளர்விசாரித்தபோது, ஜெரினா தவறவிட்ட பை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஜெரினா மற்றும் அவரது கணவர் ஜாஃபர் அலிஅங்கு சென்று உரிய ஆவணம் காண்பித்து, 22 பவுன் நகைகளுடன்பையை பெற்றுக்கொண்டனர். இந்த பையை உரியவரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்து ஆர்.பி.எஃப். காவலர் நீரஜ்குமார் பஸ்வான் மற்றும் ரயில்வே ஊழியர்களை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் ஆர்.பி.எஃப் அதிகாரிகள் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x