Published : 17 Nov 2022 07:32 AM
Last Updated : 17 Nov 2022 07:32 AM
திருவள்ளூர்: இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவில் பெண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளனர் என்று நேற்று முன்தினம் நடந்த சென்னை, அம்பத்தூர் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவில், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார். சென்னை, அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை அடங்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது.
குறுகிய இடத்தில் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த நீதிமன்ற வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வந்தனர். ஆகவே, பொதுமக்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையின் விளைவாக, தமிழக அரசின் பொதுப்பணித் துறை சார்பில், அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, ரூ.12.39 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
1.46 ஏக்கர் பரப்பளவில் நடந்து வந்த அப்பணியில், ஏற்கெனவே உள்ள 3 நீதிமன்றங்களுடன், புதிதாக சார்பு நீதிமன்றம் மற்றும் நூலகம், நீதிபதிகளுக்கான ஓய்வு அறைகள் உள்ளிட்டவை கொண்ட, மூன்று தளங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. சமீபத்தில் அப்பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, நேற்று முன் தினம் மாலை அம்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் சார்பு நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் முன்னிலையில், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
விழாவில், சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: தமிழகத்தில் சட்டம், நீதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் தரும் முதல்வராக மு.க. ஸ்டாலின் விளங்கி வருகிறார். தமிழகத்தில் தான், அதிக அளவில் பெண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளனர். அதே போல், இந்தியாவில் தமிழகத்தில்தான் பெண்கள் அதிக அளவில் சட்டக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். தமிழகத்தில், ஆரம்பத்தில் சட்டம் படிக்க, சென்னையில் மட்டும்தான் சட்டக் கல்லூரி இருந்து வந்தது. அந்நிலையை மாற்ற, முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழகம் முழுவதும் 15 இடங்களில் சட்டக் கல்லூரிகள் கொண்டு வந்தார். தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளின் தரம் உயர்ந்து வருவதால், மாணவ-மாணவிகள் சட்டம் படிக்க வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி பி.டி.ஆஷா, திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், சென்னை, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT