Published : 17 Nov 2022 07:58 AM
Last Updated : 17 Nov 2022 07:58 AM

சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ - மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

சென்னை: சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ என்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. சென்னைஎழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு கடந்த வாரம் வரை தினமும் சுமார் 5 பேர் ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த நிலையில், தற்போதுதினமும் சராசரியாக 50 பேர் வருகின்றனர். இவை தவிர தனியார் மருத்துவமனைகளில் 100-க்கும்அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு செல்கின்றனர்.

இதுதொடர்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் எம்.வி.எஸ்.பிரகாஷ் கூறியதாவது: ‘ மெட்ராஸ் ஐ’ தொற்றால் பாதிக்கப்படுவோர், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் பயன்படுத்திய துணி, சோப்பு உள்ளிட்டவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தன்மை உடையது.

‘மெட்ராஸ் ஐ’ 5 நாட்களில் குணமடையக் கூடியது என்றாலும், ஒரு சிலருக்கு பார்வையிழப்பை ஏற்படுத்தலாம். அதனால் அலட்சியம் காட்டாமல் கண் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவு மண்டல தலைவரும், முதுநிலை கண் மருத்துவருமான ஆர்.கலா தேவி கூறியதாவது:

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறார்கள் மத்தியில் இது வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலம் முடிவுக்கு வரும்போது ‘மெட்ராஸ் ஐ’ சற்றே மிதமான அளவு அதிகரிக்கும். இந்த ஆண்டு சென்னை மாநகரில் மழைப்பொழிவு காலம் நீடித்திருப்பது ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கிறது. கண் நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களில் 20 சதவீதத்தினருக்கு ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

நோயாளிகள், தங்கள் கண்களிலிருந்து வரும் திரவத்தைதுடைக்க பேப்பர் நாப்கின்களைமட்டுமே பயன்படுத்த வேண்டும்.பள்ளிகள், அலுவலகங்கள் போன்ற அடைபட்ட அமைவிடச்சூழல்களில் ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவக்கூடியது என்பதால், வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x