

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பரவலாக கனமழை பெய்த போதும், தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக விளைநிலப் பரப்பை அதிகரிக்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முறையாக பெய்ததால் நீர்நிலை களில் பாதிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. இதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடக்கம் முதலே கனமழையாக அவ்வப்போது பெய்து வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகள், கண்மாய், குளங்கள் பெரும்பாலானவை நிரம்பி வருகின்றன.
நீர்நிலை ஆதாரங்களில் போதுமான தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர். அளவான தண்ணீரை கொண்டு கிணற்று நீர் மூலம் இறவை பாசனத்தில் விவசாயம் செய்துவந்த பலர் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல் சாகுபடிக்கு மாறியுள்ளனர். மானாவாரி பயிர்களுக்கும் போதுமான மழை கிடைப்பதால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் செழித்து வளர்ந்துள்ளன.
ஆனால் விளைநிலங்களை வைத்துள்ளவர்கள் தங்கள் விவசாய பரப்பை வழக்கத்தைவிட கூடுதலாக அதிகரிக்க வாய்ப்பில்லாத நிலையில்தான் இன்றும் உள்ளனர். மழை போதுமான அளவு பெய்தும் விளைநிலங்களின் பரப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், வழக்கமாக சாகுபடி செய்யும் பரப்பளவிலேயே பயிர்களை மாற்றி சாகுபடி செய்கின்றனர். மீதமுள்ள பரப்பில் சாகுபடி செய்யாததற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை தான் காரணம் என்கின்றனர்.
கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்ய பெரும்பாலான கிராமப்புற தொழிலாளர்கள் சென்று விடுவதால் வயல்வெளிகளில் வேலைசெய்ய தொழிலாளர்கள் அதிகம் வருவதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டுகளில் மழை பொய்த்ததால் விவசாயப் பரப்பளவு படிப்படியாக குறைந்து வந்தது.
இதில் ஊரை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள், சாலைகளின் அருகில் இருந்த விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிட்டன. இந்நிலையில் விவசாயிகள் தங்களிடம் இருக்கும் நிலத்தில் போதுமான நீர் இருந்தும் முழுமையாக சாகுபடி செய்யாமல் தொழிலாளர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி சாகுபடி பரப்பளவை குறைத்து வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே பெயில்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி முத்துச்சாமி கூறுகையில், கூடுதல் நிலப்பரப்பு இருந்தாலும் வழக்கமாக பயிரிட்டுள்ள பகுதிகளிலேயே பயிர் செய்கிறோம். களையெடுக்க, தண்ணீர் பாய்ச்ச, அறுவடைப் பணி என பல்வேறு விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பதால் அதிக பரப்பளவில் விவசாயம் செய்துவிட்டு திண்டாடுவதை விட வழக்கமான பரப்பளவிலேயே விவசாயம் செய்கிறோம். இதற்கே சில நாட்களில் தொழிலாளர்கள் வருவதில்லை என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களே வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று கூறினார்.