Published : 29 Nov 2016 03:29 PM
Last Updated : 29 Nov 2016 03:29 PM

கழிவுகளால் கலங்கும் பவானி நதி: நோய் பரவும் அச்சத்தில் மேட்டுப்பாளையம் மக்கள்

பவானி நதியில் தொடர்ந்து கலக்கும் கழிவுகளால் நோய் பரவும் அச்சத்தில் பரிதவிக்கின்றனர் மேட்டுப்பாளையம் நகர மக்கள்.

நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் உற்பத்தியாகும் பவானி நதி குந்தா அணை, கெத்தை, பரளி, பில்லூர் அணைகளில் தேங்குகிறது. அங்கு மின்சாரம் தயாரிக்கப்பட்ட பின்னர், மேட்டுப்பாளையம் வழியாக கீழ்பவானி அணைக்குச் செல்கிறது.

அதேபோல, இந்த நதியின் மற்றொரு பிரிவு மேல்பவானியில் இருந்து கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கு, அட்டப்பாடி வழியாக பில்லூரை அடைகிறது. நீலகிரி மலைப் பகுதியில் உள்ள பில்லூரில் இருந்து சமதளத்தில் உள்ள நெல்லித்துறையை அடைகிறது.

குடிநீர்த் திட்டங்கள்

பவானி நதியில் பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்காக சுமார் 125 மில்லியன் லிட்டரும், பல்லடம் திட்டத்துக்காக 125 மில்லியன் லிட்டர் நீரும் பவானியில் எடுக்கப்படுகிறது.

நெல்லித்துறையிலிருந்து கவுண்டம்பாளையம் வடவள்ளி திட்டம், காரைமடை, தேக்கம்பட்டி, ஓடந்துறை, திருப்பூர், மேட்டுப்பாளையம், தெற்கு ரயில்வே, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, ஜடையம்பாளையம் ஊராட்சி, அன்னூர்-அவிநாசி, சிறுமுகை பேரூராட்சி, காரமடை கிழக்கு ஒன்றியம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 15 குடிநீர்த் திட்டங்கள் மூலம் பவானி நதியில் தண்ணீர் எடுக்கிறார்கள்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வெல்ஸ்புரம் மற்றும் சென்னாமலைக்கரடு பகுதிகளில் உள்ள இரு கதவணைகள் மூலம் தலா 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பில்லூரில் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பின்னர் வெளியேறும் தண்ணீர் முதல் கதவணையில் தேக்கப்படுகிறது. அப்போது காரமடை, கவுண்டம்பாளையம் தவிர்த்த மற்ற குடிநீர்த் திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காது. பின்னர், இரண்டாவது கதவணையில் தண்ணீர் திறக்கப்படும்போது சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், சிறுமுகை பேரூராட்சி, அன்னூர், அவினாசி உள்ளிட்ட குடிநீர்த் திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.

8 இடங்களில் கழிவுநீர்

இதற்கிடையில், மேட்டுப்பாளையம் பகுதியின் ஒட்டுமொத்த சாக்கடைக் கழிவுநீர் முழுவதும் பவானி ஆற்றில் கலக்கிறது. குறிப்பாக, உப்புபள்ளம், நந்தவனம், சுப்பிரமணியர் கோயில், சீரங்கராயன் ஓடை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. இவ்வாறு கழிவுநீர் கலந்த தண்ணீர் கதவணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கலக்கிறது. இந்த நீரைத்தான் மேட்டுப்பாளையம் பகுதிக்கு குடிநீராக விநியோகம் செய்கின்றனர்.

அதுமட்டுமின்றி, பவானியின் கிளை நதியான கல்லாறிலும் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன் நகராட்சிகளின் கழிவுநீரும் கலக்கிறது.

மேட்டுப்பாளையத்தில் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது அறிவிப்புடன் நின்றுவிட்டது. இதனால், சாக்கடைக் கலந்த கழிவுநீரையே குடிநீராகப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மேட்டுப்பாளையம் நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புக் குழுத் தலைவர் டி.டி.அரங்கசாமி ‘தி இந்து’விடம் கூறியது: மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுமார் 10 சதுரகிலோமீட்டர் பரப்பில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேட்டுப்பாளையத்துக்கு கீழ் உள்ள கதவணை 2-ல் தண்ணீர் தேக்கும்போது, மேட்டுப்பாளையம் நகர கழிவுகள் முழுமையாகவும், காரமடை பேரூராட்சி, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், ஓடந்துறை, ஐடையம்பாளையம் ஊராட்சிகளில் சில பகுதி சாக்கடைகள் அந்த நீரில் கலந்து, ஆற்றின் நீரை மாசுபடுத்துகிறது.

நீரோட்டம் தொடர வேண்டும்

சாக்கடைக் கழிவுகள் கலக்கும் பவானி நீரையே நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீராக விநியோகம் செய்கின்றனர். பவானி நதியில் தொடர்ந்து தண்ணீர் சென்றுகொண்டிருந்தால், கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டுவிடும். ஆனால், கதவணையில் தேக்கும்போது இதன் தாக்கம் அதிகரிக்கிறது.

தற்போது தினமும் சுமார் 5 மணி நேரம் மட்டுமே கதவணைகள் திறக்கப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கதவணையில் முழுமையாக தண்ணீரைத் தேக்காமல், உயிர்ச்சூழலுக்கான நீரோட்டமும், குடிநீருக்கான நீரையும் தொடர்ந்து ஆற்றில்விட வேண்டும். கதவணைகளை முழுமையாக அடைக்காமலும், சாக்கடை மற்றும் ஆலைக்கழிவு கலக்காத சுத்தமான குடிநீரை, 3 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் மக்களுக்கு வழங்க வேண்டும்.

நெல்லித்துறை அருகேயுள்ள விளாமரத்தூரிலிருந்து ஆலைக் கழிவுகள் மற்றும் நகராட்சிக் கழிவுகள் கலக்காத தூய நீரை வழங்கும் வகையில், ஏற்கெனவே செயல்பட்டு வந்த, தற்போது தூர்ந்து போயுள்ள கோமுட்டி கால்வாயைப் பயன்படுத்தலாம். மேலும், பவானி ஆற்றில் கலக்கும் ஆலைக் கழிவுகளை தடுத்து, மறுசுழற்சி செய்து, ஆலைகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையிலான திட்டத்தையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படுத்த வேண்டும்.

சுத்திகரிப்பு அவசியம்

அதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டம் அருவங்காடு, வெலிங்டன் மற்றும் குன்னூர் நகராட்சிக் கழிவுகள் காட்டேரி ஆற்றில் கலந்து, மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுக்கு வருகிறது. அதுபோல, மேட்டுப்பாளையம் நகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களின் கழிவும் ஆற்றில் கலக்கிறது. எனவே, இந்த 2 நகராட்சி கழிவுகளையும் சுத்திகரித்து, ஆற்றில் விடாமல் விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டும்.

மேட்டுப்பாளையத்துக்கு தூய்மையான குடிநீரை விநியோகம் செய்வதற்காக, தனியாக குடிநீர்க் குழாய் பதிக்க முடிவு செய்துள்ளதாகவும், ரூ.20 கோடி மதிப்பில் இத்திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் பல மாதங்களுக்கு முன்னரே, இப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தெரிவித்தார். இந்த திட்டத்தையும் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றார்.

புற்றுநோய் பாதிப்பு?

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மாவட்ட முன்னாள் துணைத் தலைவரும், பவானி நதிநீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புக் குழு பொருளாளருமான மீனாஹரி.ராமலிங்கம் கூறியது:

கோவையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெறுவோரில், அதிகம் பேர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஏனெனில், பல்வேறு கழிவுகள் கலந்த குடிநீரைப் பயன்படுத்துவதால், புற்றுநோய், மஞ்சள் காமாலை, நுரையீரல் அழற்சி, சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பல பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு ஆறு உயிரோட்டமாக இருக்க வேண்டுமெனில், அதில் தொடர்ந்து நீர்வரத்து இருக்க வேண்டும். எனவே, பவானி ஆற்றின் கதவணைகளில் தேவைப்படும் நேரங்களைத் தவிர, மற்ற நேரத்தில் தண்ணீரைத் தேக்கிவைக்காமல், திறந்துவிட வேண்டும். அப்போது, கழிவுகள் நீரில் அடித்துச் செல்லப்படுவதுடன், குடிநீர்த் திட்டங்களுக்கான குடிநீரும் கிடைக்கும். குறைந்தபட்சம் 200 கன அடி நீரையாவது தொடர்ந்து ஆற்றில் விட வேண்டும். சாக்கடைக் கழிவுநீர், ஆலைகளின் கழிவுநீர், காகித ஆலைக் கழிவுநீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x