

சென்னையில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்வது கட்டாயம். பதிவு செய்ய வருபவர்களை அலைக்கழித்தால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். குறிப்பாக தமிழகத் துக்கு அதிக அளவில் அகதிகளாக வந்தனர். தமிழகத்தில் தற்போது 113 முகாம்களில் 65 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் உள்ளனர். சென்னையில் மட்டும் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மற்ற இடங் களில் 35 ஆயிரம் பேர் உள்ளனர்.
சென்னையில் மடிப்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், நீலாங்கரை, திரு வான்மியூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் இலங்கைத் தமிழர்கள் பரவலாக வசிக்கின்றனர்.
தமிழகத்துக்கு வரும் இலங்கைத் தமிழர்கள் அவர்கள் தங்கியுள்ள அல்லது வசிக்கிற எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்வது கட்டாயம். ஆனால், சிலர் விசா காலம் முடிந்தும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை யடுத்து, சென்னையில் தங்கி யுள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரும் காவல் நிலையங் களில் பதிவு செய்திருப்பது கட்டா யம் என பெருநகர காவல் ஆணை யர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அது மட்டுமின்றி, ‘‘காவல் நிலையத்துக்கு வரும் இலங்கைத் தமிழர்களை அங்கேயே பதிவு செய்ய வேண்டும். அவர்களை சேப்பாக்கம் அகதிகள் மறுவாழ்வு துறை அலுவலகம், இலங்கை துணைத் தூதரக அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகம், குடியுரிமை அலுவலகம் ஆகிய இடங்களுக்குச் செல்லுமாறு அலைக்கழித்தால் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் புள்ளி விவரங்களை அறியவும், அவர்களது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், அவர்கள் வீணாக அலைக்கழிக்கப்படுவதை தடுக்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப் பிடத்தக்கது.