Published : 17 Nov 2022 04:35 AM
Last Updated : 17 Nov 2022 04:35 AM
சேலம்: விஷம் குடித்து உயிரிழந்த மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் 17 வயது மகள், அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார், கடந்த மாதம் வீட்டில் இருந்து திடீரென மாணவி காணாமல் போனார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
மணிகண்டனிடம் இருந்து மாணவியை போலீஸார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், மணிகண்டன் உறவினர் ஒருவருடன் மாணவியின் வீட்டுக்கு வந்து, 18 வயதானதும் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துச் சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் மணிகண்டனையும், அவரது உறவினரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், நவம்பர் 3-ம் தேதி விஷம் அருந்தி மாணவி தற்கொலைக்கு முயன்றார். மாணவியை மீட்டு ஆத்தூர், வீரகனூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்றோர் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுசம்பந்தமாக போலீஸார் மாணவியின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து, மாணவியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT