

ஏ.சி. வசதியுடன் கூடிய ஒப்பந்த பஸ்களுக்கு மத்திய பட்ஜெட்டில் புதிதாக சேவை வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பஸ் கட்டணம் விரைவில் உயர்த்தப் படலாம் என்று கூறப்படுகிறது.
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாநில அரசுக்கு 3 அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை வரி செலுத்தி பஸ்களை இயக்கி வருகின்றனர். ஏ.சி., அதிர்வு இல்லாத சொகுசான இருக்கைகள், படுக்கும் வசதி, விரைவான பயணம் ஆகிய அம்சங்கள் இருப்பதால் நடுத்தர மக்கள்கூட ஆம்னி பஸ்களில் விரும்பிப் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் டில் ஆம்னி ஏ.சி. பஸ்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட் டுள்ளது. இதனால், ஆம்னி பஸ் கட்டணம் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் பர்வீனிடம் கேட்டபோது, ‘‘ஏசி ஆம்னி பஸ்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரத்தையும் இதுவரை பார்க்கவில்லை. பார்த்த பிறகே, ஏ.சி. ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் உயர்த்துவது பற்றி முடிவெடுக்கப்படும். கட்டணத்தில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை’’ என்றார்.
தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க சேர்மன் நடராஜன் கூறியதாவது:
ஆம்னி பஸ்களுக்கு சேவை வரி 2002 ம் ஆண்டு விதிக்கப்பட் டது. பின்னர் நீதிமன்றத்தில் தடை கேட்டதால் விலக்கிக்கொள்ளப் பட்டது. இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் ஆம்னி ஏ.சி. பஸ்களுக்கு 12.36 சதவீதம் சேவை வரி விதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே மாதந்தோறும் டீசல் விலை உயர்வு, சுங்க வரி வசூல் போன்றவற்றால் இத்தொழில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போது சேவை வரியையும் புதிய அரசு விதித்திருப்பது இத்தொழிலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சேவை வரியால் ஏற்படும் இழப்பை எங்களால் சமாளிக்க முடியாது. கட்டணம் உயர்த்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எவ்வளவு கட்டணம் என்பது குறித்து சென்னையில் அடுத்த வாரம் நடக்கும் எங்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.