Published : 17 Nov 2022 04:40 AM
Last Updated : 17 Nov 2022 04:40 AM
காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் அருகே பள்ளி மேற்கூரையில் நேற்று சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால், குழந்தைகளுடன் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் அருகே கருடபாளையம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 200-க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல வகுப்புகள்நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு வகுப்பின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் யார் மீதும் விழவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பள்ளியில் இருந்த அனைத்துக் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, பள்ளியின் முன் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த கல்வித்துறை அலுவலர்கள் அங்கு வந்து,போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பெற்றோர்கள் சரமாரியாக எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறியபோது, “பாழடைந்த கட்டிடத்தில் பள்ளியை நடத்த கல்வித் துறையினர் அனுமதித்தது கண்டனத்துக்குரியது. அவர்களின் குழந்தைகளாக இருந்தால், இந்தக் கட்டிடத்தில் படிக்க வைப்பார்களா? கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யாமல் பள்ளியை இயங்க வைத்தது கல்வித் துறையின் மெத்தனப் போக்கை காட்டுகிறது.
இதுபோன்று அலட்சியமாக செயல்பட்ட கல்வித் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பள்ளிக்கு நிரந்தரமாக கட்டிடம் கட்டுவதுடன், தற்காலிகமாக உறுதியான கட்டிடத்துக்கு பள்ளியை இடம் மாற்ற வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம்” என கூறிவிட்டு, குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT