

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி மாதாந்திர கூட்டம், நகர்மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். நகர்மன்றத் துணைத் தலைவர் ஹரி பாஸ்கர், நகராட்சி ஆணையர்(பொறுப்பு) ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், மத்திய- மாநில அரசுகளின் நிதியுதவியுடன் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டம், சாலைகள் செப்பனிடுதல், வாகனங்கள் மற்றும் மின் மோட்டார்கள் பழுது நீக்குதல், டெங்கு கொசு ஒழிப்புப் பணிக்கு ஒப்பந்தப் பணியாளர்கள் நியமித்தல் உட்பட 26 தீர்மானங்கள் விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டன. மேலும், பல லட்ச ரூபாய் வாடகை கொடுப்பதைத் தவிர்க்கும் வகையில், நகராட்சிக்குச் சொந்தமாக பொக்லைன் வாகனம் வாங்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் வலியுறுத்தினர்.
கூட்டத்தில் திமுக கவுன்சிலர் துரை காமராஜ் பேசியது: ஏன்தான் கவுன்சிலர் ஆனோம் என வேதனையாக உள்ளது. எனது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால், மக்களைச் சந்திக்கவே பயமாக உள்ளது. எது கேட்டாலும் நிதி இல்லை என்கிறீர்கள். நகராட்சி ஊழியர்களை ஏதேனும் அவசரப் பணி நிமித்தமாக அழைத்தால்கூட செல்போனை எடுப்பதில்லை.
வார்டுகளில் நலத் திட்டப் பணிகளைச் செய்து தருவதில் நகராட்சி நிர்வாகம் முன்னுரிமை அளிப்பதில்லை. இது போன்ற காரணங்களால் மக்களிடம் கவுன்சிலர்கள் மீது பெரிய அதிருப்தி உள்ளது. இனியாவது நலத் திட்டப் பணிகளைச் செய்வதில் கவனம் செலுத்துங்கள் என்றார். இதே கோரிக்கையை வேறு சில கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.