

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் மின் கட்டண உயர்வு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வால் கூலி உயர்வு கேட்டு நவம்பர் 23-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மருத்துவ துணி எனப்படும் பேன்டேஜ் துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. தமிழக அரசின் அதிகபட்ச மின்கட்டண உயர்வு காரணமாக விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலி உயர்வு கேட்டு சத்திரப்பட்டி வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஏற்றுமதி மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளர் கூட்டமைப்பிடம் முறையிடப்பட்டது. ஆனால், இதுவரை கூலி உயர்வு வழங்கப்படாததால் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.
சத்திரப்பட்டியில் இன்று நடைபெற்ற சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில், '16 ஊடை கொண்ட 1 மீட்டர் துணிக்கு 166.5 பைசா கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு மீட்டருக்கு 10 பைசா உயர்த்தி 176.5 பைசா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூலி உயர்வு வழங்கா விட்டால் வரும் 23-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. நவம்பர் 23-ம் தேதி ராஜபாளையம் ஏற்றுமதி மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளர் கூட்டமைப்பு அலுவலம், 24- ம் தேதி கிராம நிர்வாக அலுவலகம், 25- ம் தேதி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்' என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சத்திரப்பட்டி வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் குருசாமி கூறுகையில், ''முன்பு 5 தறிகள் உடைய விசைத்தறி கூடத்திற்கு 750 யூனிட் மானியம் போக ரூ.4 ஆயிரம் மின் கட்டணம் வந்தது. ஆனால் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின் ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டி உள்ளது. இதனால் விசைத்தறி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் மருத்துவ துணி உற்பத்தியாளர் கூட்டமைப்பிடம் கூலி உயர்வு கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளோம். வரும் 23- ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்'' என்றார்.