Published : 16 Nov 2022 06:02 PM
Last Updated : 16 Nov 2022 06:02 PM

அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயரும் சென்னையின் குடிநீர் தேவை: தமிழக அரசின் திட்டம் என்ன?

செம்பரம்பாக்கம் ஏரி | கோப்புப் படம்

சென்னை: சென்னையில் குடிநீர் தேவை, அடுத்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு தீர்வு காண ஆய்வு ஒன்றை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் அதிக அளவு மழை பெய்தாலும் கோடைக்காலத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பருவமழை காலங்களில் மழைநீரை சேமிப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பதுதான் வறட்சி ஏற்படுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பருவமழையின்போது பெய்யும் மழையில் 90 சதவீத தண்ணீர் கடலில் கலப்பதாக நீரியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது சென்னையின் குடிநீர் தேவை 830 எம்எல்டியாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த தேவை இரு மடங்கு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னைக்கு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், வெள்ள மேலாண்மை, கூடுதல் குடிநீர் தேவைகளை கண்டறிவது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்த நீர்வளத் துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி கொளஸ்தலையாறு வடி நிலப்பகுதியில் 1949 சகிமீ, கூவம் வடிநிலப் பகுதியில் 472 சகிமீ, அடையாறு வடிநிலப் பகுதியில் 868 சகிமீ, நந்தியாறு வடிநிலப் பகுதியில் 698 சகிமீ, நாகையார் வடிநிலப் பகுதிகளில் 1079 சகிமீ, ஆரணியாறு வடிநிலப் பகுதிகளில் 1729 சகிமீ, கும்மிடிப்பூண்டி வடிநிலப் பகுதிகளில் 468 சகிமீ, கோவளம் வடிநிலப் பகுதிகளில் 781 சகிமீ, கீழ் பாலாறு வடிநிலப் பகுதிகளில் 1077 சகிமீ, செய்யாறு வடிநிலப் பகுதிகளில் 4510 சகிமீ, வேகவதி ஆறு வடிநிலப் பகுதிகளில் 439 சகிமீ, ஓங்கூர் வடிநிலப் பகுதிகளில் 1313 சகிமீ என்று மொத்தம் 15,383 சதுமீ அளவிற்கு துணை வடிநிலப் பகுதிகளில் ஆய்வு ஒன்றை நடத்த நீர்வளத் துறை முடிவு செய்துள்ளது.

இந்த ஆய்வில் பெய்யும் மழைநீரை முழுமையாக சேமித்து பயன்படுத்துதல், துணை வடிநிலப் பகுதிகளில் இடையில் தண்ணீர் பரிமாற்றம், சென்னைக்கு வெளியில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருதல், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கழிவு நீரை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் எதிர்பாராத அளவுக்கு வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படுகிறது. சென்னையில் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த் தேக்கங்கள் வறட்சி காலத்தில் வறண்டு விடுகிறது. பருவமழை காலத்தில நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக சென்னையின் குடிநீர் தேவையை ஈடுகட்ட வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, வெள்ள நீர் மேலாண்மை திட்டத்தில் நவீன முறைகளை செயல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது" என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x