

கோவை வனக் கோட்டத்தில் உள்ள சிறுமுகை வனச்சரகத்தில் நீலகிரி மலைத்தொடரின் கிழக்குச் சரிவு வனப்பகுதி உள்ளது. இங்கு வன விலங்குகள் அதிக ளவில் உள்ளன. அதையொட்டி யுள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகள் அமைந்துள்ள தால், வனவிலங்குகளுக்கு அங்கு நீராதாரம் இருந்து வந்தது. கடந்த சில பருவங்களாக மழை பொய்த்து வருவதால், சிறுமுகை பகுதியில் வறட்சி நிலவுகிறது.
சிறுமுகை சரகம், ஓடந்துறை வனப்பிரிவில் உள்ள லிங்காபுரம், வஜ்னபாளையம் வனப் பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோத னைக்கு உட்படுத்தினர். வனத்துறை கால்நடை மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்தியது. அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். யானையின் உடல் உறுப்புகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
மாவட்ட வன அலுவலர் ராம சுப்பிரமணியம் கூறும்போது, ‘பருவ மழை இல்லாததால் ஏற்பட்ட வறட்சியே வனவிலங்குகள் இறப் புக்கு காரணம். இருந்தும் 4 கி.மீ. தூரத்துக்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்கிறோம். ஆனால் அது மட்டுமே யானைகளுக்கு போதாது. லாண்டனா செடிகளை அகற்றி, தீவனக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கும் மழை அவசியமாக உள்ளது’ என்றார்.
சிறுமுகை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக யானை கள் இறப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடற்புழுத் தாக்கம், நீர் மாசுபாடு உள்ளிட்ட காரணங் களால் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்பட்டு ஒரு வருடத்தில் ஐந்தாவது யானை உயிரிழந்துள்ளது குறிப் பிடத்தக்கது.
சூழலியல் ஆர்வலர் கே.மோகன் ராஜ் கூறும்போது, ‘பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக இருப்பதால், அங்கு குறைந்தபட்ச நீராதாரமாவது கிடைக்கும். எனவே நீர் வறட்சி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. யானைகளின் நோய் தாக்குதலுக்கு என்ன காரணம் என்பதை வனத்துறை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்’ என்றார்.