தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் கூடுதலாக ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,“துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
இதன்படி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 லட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் இன்று (நவ.16) உத்தரவிட்டுள்ளார்.
