மாணவி பிரியா மரணம் | மருத்துவக் குழுவின் முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொசு வலைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொசு வலைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
1 min read

சென்னை: மாணவி பிரியா மரணம் தொடர்பான மருத்துவக் குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது மக்களுக்கு கொசு வலைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் நீர் வழி தடங்களுக்கு அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கொசுவலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு கொசுவலைகள் வழங்கப்பட உள்ளது. பருவமழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.

மாணவி பிரியா உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட பிறகே உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கையை வைத்து தான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை காவல்துறை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்.

அண்மையில் குஜராத் மாநிலத்தில் தொங்கு பால விபத்தில் பலர் உயிரிழந்த பொழுது 'இது கடவுளின் விதி' எனக் கூறி தப்பித்தது போன்று நாங்கள் செயல்படவில்லை. கவனக்குறைவு காரணமாக இது நடைபெற்றது என்ற தவறை உடனே தெரிவித்து அதற்கு தீர்வு என்ற அடிப்படையில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அதனை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்." இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in