அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 நாட்களில் கிடைக்கும்: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்

அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 நாட்களில் கிடைக்கும்: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
Updated on
1 min read

வங்கி ஏடிஎம்-களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 2 நாட்களில் கிடைக்கும். இதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் 100 ரூபாய் நோட்டுகளை பதுக்க வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர். இதனால் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

இதனிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஏடிஎம்-கள் திறக்கப்பட்டன. இதனால் வங்கிகளில் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏடிஎம்களில் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்தன. பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படாததால் இயங்கவில்லை. எனவே வங்கிகளில் கூட்டம் குவியத் தொடங்கியது.

தற்போதைய நிலை குறித்து, சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 600 வங்கிக் கிளைகள் உள்ளன. சென்னையில் மட்டும் ஆயிரத்து 500 வங்கிக் கிளைகள் உள்ளன. அதேபோல், தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ஏடிஎம் மையங்களும், சென்னை நகரில் ஆயிரத்து 200 ஏடிஎம் மையங்களும் உள்ளன. இந்த மையங்களில் பணம் நிரப்ப அனைத்து வங்கிகள் சார்பில் தமிழகம் முழுவதும் 275 பணக் கருவூலங்கள் உள்ளன. ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் முதலில் இந்த பணக் கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு அனுப்பப்படும்.

மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளதை அடுத்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வழங்கப்படுகின்றன. ஏடிஎம் மையங்களில் வழங்கப்படவில்லை. ஏடிஎம் இயந்திரங்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வழங்குவதற்கு ஏற்ப அதில் உள்ள சாப்ட்வேரை திருத்தி அமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களுக்குள் இப்பணி முடிவடைந்துவிடும். பின்னர் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்படும்.

அதேபோல், பொதுமக்கள் தங்கள் கையில் வைத்துள்ள 100 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைக்க வேண்டாம். அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்வதன் மூலம் சில்லறைத் தட்டுப்பாடு நீங்குவதோடு பணப்புழக்கமும் அதிகரிக்கும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in