

கோவையில் உள்ள நீர்நிலைகளின் கரைகளைப் பாதுகாப்பதற்காக கோவை மாநகராட்சியும், தன்னார்வலர்களும் இணைந்து பனை மரங்களை வளர்க்கும் ‘பனை நர்சரியைத்’ தொடங்கியுள்ளனர்.
வறண்ட நிலத்திலும் வளரும் தாவரமான பனை மரம், தமிழகத்தின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கொஞசம் கொஞ்சமாக அழிவைச் சந்தித்து வருகின்றன. அதன் பயன்களை உணர்ந்தவர்கள், அந்த மரத்தைப் போற்றிப் பாதுகாக்கின்றனர்.
அந்த வகையில், கோவை மாநக ராட்சியும், தன்னார்வ அமைப்பு களும் இணைந்து, கோவையில் உள்ள குளக் கரைகளில் பனை மரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
நொய்யல் நீராதாரத்தைக் கொண்டு, மாவட்டத்தில் 38 நீர்நிலை களும், கோவை மாநகரில் 8 குளங் களும் உள்ளன. இந்த 8 குளங்களும் பல்வேறு வகைகளில் மாசுபட்டுக் கிடக்கின்றன. எனினும், கொஞ்சம் உயிர்ச்சூழல் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அதைப் பாதுகாக்கும் வகையில், குளக்கரைகளில் செடி, கொடிகளை வளர்க்கவும், பனை மரங்கள் மூலம் கரையைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதையொட்டி, சிங்காநல்லூர் குளத்தின் கரையில் பனை மரங்களுக்காக நர்சரி தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையார் விஜய கார்த்திகேயன் நேற்று இதை திறந்து வைத்தார்.
தமிழகத்தில் தட்டுப்பாடு
இப்பணியை மேற்கொண்டுள்ள விலங்குகள் மீட்பு அமைப்பைச் சேர்ந்த வின்னிபீட்டர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “பண்டைய காலத்தில் நீர்நிலைக் கரைகளில் பனை மரத்தைதான் நட்டுவைத்தார்கள். இது வறண்ட நிலத்திலும் வளரும் தன்மையுடையது.
பனையின் சல்லி வேர்கள் கரைகளை இறுக வைப்பதால், குளக்கரைக்கு பாதுகாப்பும் அதிகம். ஆனால், இன்றைய சூழலில் நீர்நிலைகளும் அழிந்து, அதைப் பாதுகாத்த பனைகளும் அழிந்துவிட்டன.
கோவை சிங்காநல்லூர் குளத்தை மீட்டெடுக்கும் முயற்சி யில், கடந்த 2 மாதங்களாக, குளக்கரையில் 2,000 பனை விதை களையும், 500 பனைக் கன்றுகளை யும் நட்டு வளர்க்கிறோம். ஆனாலும், தேவை அதிகமாக இருக்கிறது. சிங்காநல்லூர் மட்டு மின்றி கோவையின் அனைத்துக் குளங்களின் கரைகளிலும் பனை மரத்தை வளர்க்க வேண்டி யுள்ளது.
எனவே, மாநகராட்சியின் உதவியுடன் கேரளத்திலிருந்து பனை விதைகளை வாங்கி வந்து, நர்சரியைத் தொடங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டில் பனை மரங்களுக் காக தொடங்கப்பட்ட முதல் நர்சரி இதுதான். இங்கு வளர்க்கப்படும் பனைக் கன்றுகளை கோவையின் நீர்நிலைகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும்.
கேரளாவில் முக்கியத்துவம்
இந்த நர்சரிக்காக, கோவையின் பல பகுதிகளில் பனை விதை கிடைக்கிறதா என்று தேடினோம். ஆனால், மக்களிடம் பனை மரம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், எங்குமே பனை விதை கிடைக்கவில்லை. ஆனால், கேரளாவில் அதிக அளவில் கிடைத்தது.
அங்குள்ள நர்சரியில் அதிக விலைக்கு விற்கப்படும் தாவரமே பனைக் கன்றுகள்தான். போக்கு வரத்து உள்ளிட்ட செலவுகளோடு ஒரு பனைக் கன்றுக்கு ரூ.45 வரை செலவாகிறது. எனவே, அங்கிருந்து பனை விதைகளையும், கன்றுகளை யும் வாங்கி வந்தோம். இதற்கு ‘இன்டெக்ரா ஆட்டோமேஷன்’ என்ற நிறுவனம் உதவுகிறது.
சிங்காநல்லூர் குளத்தைப் பொறுத்தவரையில், செடி, கொடி, பூச்சி, பறவைகள் என 720 வகை உயிரினங்கள் உள்ளன. அவற்றில் 396 தாவர வகைகளைச் சேர்ந்தவை.
அரிய வகை பட்டாம் பூச்சிகளும் அதிக அளவில் உள்ளன.
இந்த உயிர்ச்சூழல் நிலைக்க வேண்டுமானால் பனை மரங்களோடு சேர்த்து, புதர்ச் செடிகளையும் வளர்க்க வேண்டும். அதற்கான விதை சேகரிப்பு மற்றும் நர்சரி அமைப்புப் பணிகளையும் விரைவில் தொடங்க உள்ளோம். இந்தப் பணியில், மாநகராட்சியோடு, விலங்குகள் மீட்பு அமைப்பு, கிரீன் குளோபல் அறக்கட்டளை, அக்னி சிறகுகள், சிக்ஸ்த் சென்ஸ் அமைப்பினரும், கிருஷ்ணா கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர் என்றார்.
மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறும்போது, “கோவை மாநகராட்சியில் நீர்நிலை களைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள் ளோம். அடுத்தகட்டமாக, பனை மரங்களை வளர்ப்பதற்காக ‘பனை நர்சரி’ தொடங்கியுள்ளோம். இது போன்ற முயற்சிகள் தொடரும்” என்றார்.