Published : 16 Nov 2022 06:59 AM
Last Updated : 16 Nov 2022 06:59 AM

மத்திய அரசு நிதியுதவியுடன் 7 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்துக்கு பெற வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சார்பில் இதுவரை மூன்று கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் உட்பட மொத்தம் 93 மருத்துவக் கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள கல்லூரிகளும் அடுத்த கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று தெரிகிறது.

இந்தச் சூழலில் நான்காவது கட்டமாக 100 மருத்துவக் கல்லூரிகளை 2027-ம் ஆண்டுக்குள் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதில் தமிழகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருச்சிக்கு அருகில் உள்ள பெரம்பலூர், புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. கடலூர் மாவட்டத் தலைநகரில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லை.

இந்த குறையை போக்கும் வகையில், மத்திய அரசு நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்படவிருக்கும் 100 மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தது 7 கல்லூரிகள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு இப்போதிலிருந்தே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x