

திருச்சி: ஆதீனகர்த்தர் பதவியிலிருந்து விலகியது மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் முழுமனதுடன் எடுத்த முடிவு என்றும், யாரும் நிர்ப்பந்திக்கவில்லை என்றும் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்தின் 233-வது ஆதீனம் திருச்சிற்றம்பல தேசிக ஞான பிரகாச பரமாச்சாரியார் தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் கூறியது: எனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் முழுமனதுடன் மடாதிபதி பதவியை துறக்க முடிவு செய்து ஆலோசனை குழுவிடம் கடிதம் அளித்தேன். இக்குழு அறநிலையத்துறைக்கு பரிந்துரை செய்தது, துறையும் அதை ஏற்றுக் கொண்டது. ஆனால்நிர்பந்தம் காரணமாக நான் பதவி விலகிவிட்டதாக கூறுவது தவறு.
மடத்தின் சொத்துகளை அனுபவிப்பவர்களும், அனுபவிக்க ஆசைப்படுபவர்களும், அவர்கள் மூலம் ஆதாயம் அடைபவர்களும் தங்கள் சுய லாபத்துக்காக ஆலோசனைக் குழுவினரையும், அரசு அதிகாரிகளையும் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். தொண்டை மண்டல சைவ முதலியார்கள் அனைவரும் திருமடத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என்றார்.
ஆதீன ஆலோசனைக் குழுத் தலைவர் விஜயராஜன் கூறியது: அறநிலையத்துறை சட்டப்படி ஆதீனகர்த்தர் இல்லாதபோது, தற்காலிகமாக ஒருவர் அதை நிர்வகிக்க வேண்டும் என உள்ளது. அறநிலையத்துறை ஆய்வு செய்துபொருட்களை மதிப்பிட்டு, அதை ஆலோசனைக் குழுவிடம் ஒப்படைப்படைத்து விடுவார்கள். அதனால் தான் அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மடத்தை அறநிலையத்துறை கைப்பற்றி விட்டதாக கூறுவது தவறானது. மடத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி சொத்துகள் எதுவும் கிடையாது என்றார்.