

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடலூரில் உள்ள அவரது பெற்றோரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த வழக்கில் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி சிலரைக் கைது செய்ததுடன், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி டிஎஸ்பி விஷ்ணுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர் அதிகாரிகள் அவருக்கு அளித்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை ரவி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று சென்னை சிபிஐ எஸ்பி பாலாஜி தலைமையில் 5 பேர் குழுவினர் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பாக கடலூரில் உள்ள அவரது தந்தை ரவி, தாயார் கலைச்செல்வி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 2 மணி நேரம் நீடித்தது.