

கோவை: கோவை மாநகரில் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டுநர்களிடம் இருந்து ஒரு வாரத்தில் ரூ.13.49 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகை சமீபத்தில் அதிகரிக்கப்பட்டது. அதனடிப்படையில், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் புதிய அபராதத் தொகையை வசூலித்து வருகின்றனர்.
போக்குவரத்து காவல்துறையினர் கூறும்போது,‘‘ தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினாலோ, காரில் சீட் பெல்ட் அணியாமல் இருந்தாலோ தலா ரூ.1,000, சிக்னலை மீறிச் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. கோவை மாநகரில் இந்த புதிய அபராதத் தொகை அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஒருவார காலத்தில் தலைக்கவசம் அணியாத 1,349 வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ரூ.13 லட்சத்து 49 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக்குமார் கூறும்போது,‘‘மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல் 15 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படும். வாகனங்களில் நம்பர் பிளேட் விதிமுறைகளின்படி பொருத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் பிடிபடும்போது அபராதத் தொகை அதிகரிக்கும்.
சமீபத்தில் சில நாட்கள் நம்பர் பிளேட் விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்களை தீவிரமாக கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மதுபோதையில் பிடிபடும் வாகன ஓட்டுநர்கள், சாலை உயிரிழப்பு விபத்துகளில் பிடிபடும் வாகன ஓட்டுநர்களின், ஓட்டுநர் உரிமம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்து தற்காலிகமாக ரத்து செய்யப்படும்’’ என்றார்.