

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு நாள் காய்கறி விற்பனை அளவு, ரூ.6.70 கோடி. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின், தற்போது நாளொன்றுக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள, டிசம்பர் 30-ம் தேதி வரை அனுமதிக்க வேண்டும். விவசாயம், தொழில், வர்த்தகம் என பல்வேறு துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை வர்த்தகம் 50 முதல் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
கறுப்புப் பணத்தில் 94 சதவீதம் வெளிநாட்டு கரன்ஸி, தங்கக் கட்டிகள், ரியல் எஸ்டேட் முதலீடுகள் என பல வடிவத்தில் இயங்குகின்றன. வெறும் 6 சதவீதம் நோட்டுகளே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, பிரதமரின் இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை முற்றாக ஒழிக்க முடியாது. நாட்டில் மொத்தம் புழங்கக்கூடிய 17 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளில், வெறும் 400 கோடி ரூபாய் மட்டுமே கறுப்புப் பணம். பயங்கரவாதிகளுக்கான பணப் பரிவர்த்தனை ரூபாய் நோட்டுகளாக கைமாறுவதில்லை, எலக்ட்ரானிக் முறையில் கைமாற்றப்படுகிறது. எனவே தற்போதைய நடவடிக்கையால், இதை தடுத்து நிறுத்த முடியாது.
யார் ஊழல் செய்கிறார்களோ அவர்களே பிரதமருக்கு தேர்தலுக்குப் பணம் செலவு செய்தனர். கார்ப்பரேட்களுக்கு வழங்கிய கடன் தொகையில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடி வாராக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது என நாடாளு மன்றத்தில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் இருந்து பெறப்பட்ட ரூ.12 லட்சம் கோடி கடனை, கார்ப்பரேட் நிறுவனங்கள் திரும்பச் செலுத்தவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதிக்கும்போது, பிரதமர் மோடி அவைக்கு வராமல் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.