

மக்களுக்கு போய்ச் சேரவேண்டிய பயனை மடை மாற்றும் வகையில் கலால் வரியை விதிப்பது அரசியல் ஏமாற்று வேலை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''2014-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்துகிறது.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி விலகுகிற போது மே 2014-ல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 106 டாலராக இருந்தது. அது ஜனவரி 2016-ல் 26 டாலராக குறைந்து தற்போது 50 டாலராக உள்ளது. ஏறத்தாழ 75 சதவிகிதம் விலை குறைந்துள்ளது.
ஆனால், கடந்த 28 மாதங்களாக மத்திய பாஜக அரசு பலமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 89 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 86 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இத்தகைய விலை உயர்வுகளை ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு அறிவித்து வருகிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் விலையேற்றம் செய்வதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தக்கூடாது என்பதற்காக மத்திய காங்கிரஸ் அரசு பெட்ரோலியம் பொருட்களின் விலை உயர்வை தடுப்பதற்காக ஆண்டுதோறும் மானியமாக ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் கோடி வழங்கியது.
கடந்த 2014 நவம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.20 மற்றும் டீசலுக்கு ரூ.3.46 என்றிருந்த கலால் வரி தற்போது, முறையே, ரூ.21.48 , ரூ.17.33 என உயர்த்தப்பட்டுள்ளது. இதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறையை போக்குவதற்காக மக்களுக்கு போய்ச் சேரவேண்டிய பயனை மடை மாற்றும் வகையில் கலால் வரியை விதிப்பது அரசியல் ஏமாற்று வேலை'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.